உருமாறிய பாறை
உருமாறிய பாறை என்பது பாறைகளின் ஒரு வகையாகும். இது முதல்நிலைப்பாறை (protolith) எனப்படும் ஏற்கனவே உள்ள பாறைகள் வளருருமாற்றம் (metamorphism) என்னும் செயற்பாட்டின் மூலம் மாற்றம் அடைவதால் உருவாகின்றது. முதல்நிலைப்பாறை 150 பாகை செல்சியசுக்கு மேற்பட்ட வெப்பநிலையிலும், உயர்ந்த அமுக்கநிலையிலும் இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்களுக்கு உட்படுகிறது. முதல்நிலைப்பாறை படிவுப் பாறையாகவோ, தீப்பாறையாகவோ அல்லது இன்னொரு பழைய உருமாறிய பாறையாகவோ இருக்கலாம். புவியோட்டின் பெரும்பகுதியை உருவாக்குபவை உருமாறிய பாறைகளே. இவை அவற்றின் மேற்பரப்புத் தன்மை, வேதியியல் மற்றும் கனிமச் சேர்மானங்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. இவை அடுக்குப்பாறைகள் எனவும் அழைக்கப்படும்.
புவி மேற்பரப்புக்குக் கீழ் ஆழத்தில் உள்ள பாறைகள் அவற்றுக்கு மேலுள்ள பாறைகளால் ஏற்படும் உயர் அமுக்கத்தினாலும், உயர் வெப்பநிலையாலும் உருமாறிய பாறைகளாக மாறக்கூடும். இது தவிரக் கிடைத்திசையான அழுத்தத்தைக் கொடுக்கும் பாறைகள் ஒன்றுடன் ஒன்று மோதுதல் போன்ற புவிப்பொறைச் (tectonic) செயற்பாடுகளினாலும், உராய்வு, உருத்திரிபு போன்றவற்றாலும் உருமாறிய பாறைகள் உருவாகலாம். புவியின் ஆழத்தில் இருந்து அதிக வெப்பநிலையில் உள்ள உருகிய பாறைக் குழம்பு பிற பாறைகளூடு செல்லும் போது அவை வெப்பம் ஊட்டப்படுவதாலும் இவ்வகைப் பாறைகள் உண்டாகின்றன.
அரிப்பினாலும், மேலெழுவதாலும் தற்போது புவி மேற்பரப்புக்கு அண்மையில் காணப்படும் உருமாறிய பாறைகளை ஆராய்வதன் மூலம், புவியின் மூடகத்தில் இருக்கக்கூடிய வெப்பநிலை, அமுக்கம் முதலியவை பற்றி அரிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடிகிறது. சிலேட் (slate), சலவைக்கல் (marble), களி உருமாற்றப்பாறை (schist) என்பன உருமாறிய பாறைகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.