உள்ளடக்கத்துக்குச் செல்

திருச்சபை உருவாதல்: கிறித்து பிறப்பு முதல் கி.பி. 33 வரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருச்சபை வரலாற்றின் கால கட்டங்கள்

[தொகு]

கத்தோலிக்க திருச்சபையின் வரலாறு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான கால கட்டத்தை உள்ளடக்கியது. அதன் வரலாற்றுக் காலங்களைப் பின்வருமாறு பிரிக்கலாம்:[1]

இயேசு திருச்சபையை நிறுவுகிறார் - கி.பி. சுமார் 33 ஆண்டு வரையிலான நிகழ்வுகள்

[தொகு]
மக்களுக்குப் போதனை வழங்கும் இயேசு. கற்பதிவுக் கலை. கி.பி. 6ஆம் நூற்றாண்டு. ஏத்தன்சு.
  • கி.மு. சுமார் 6ஆம் ஆண்டிலிருந்து 4ஆம் ஆண்டுக்குள்: இயேசு பிறப்பு. லூக்கா நற்செய்திப்படி, இயேசு பெத்லகேமில் பிறந்தார். அப்போது பேரரசர் அகுஸ்து சீசர் உரோமைப் பேரரசராகவும், அவரது ஆளுகையின்கீழ் யூதேயாவில் ஏரோது மன்னனும் ஆண்டனர். இயேசு கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். மரியா தூய ஆவியின் வல்லமையால் கருவுற்றிருந்தார். இயேசு கடவுளின் மகன் என்று கிறித்தவர்களால் போற்றி வணங்கப்படுகிறார்.

தற்போது வழக்கிலுள்ள கிரகோரியன் ஆண்டுக்கணிப்பு கி.மு., கி.பி. என்று, அதாவது, கிறிஸ்துவுக்கு முன், கிறிஸ்துவுக்குப் பின் என்றுள்ளது. கி.பி. 5-6ஆம் நூற்றாண்டளவில் சிரியாவில் வாழ்ந்த தியோனிசியசு அடியார் (Dionysius Exiguus) என்னும் துறவி, ஆண்டவரின் ஆண்டுக்கணிப்பு (Anno Domini) என்னும் பெயரில் இக்கணிப்பு முறையை உருவாக்கினார். ஆனால், அவர் கணக்கிட்ட முறையில் தவறு ஏற்பட்டதால், இயேசுவின் பிறப்பு ஆண்டை ஒரு சில ஆண்டுகள் முன்தள்ளிப் போட்டுவிட்டார்.[2]

  • கி.பி.சுமார் 27ஆம் ஆண்டு: இயேசு திருமுழுக்குப் பெறுகிறார். தம் பொதுப்பணியைத் தொடங்குகிறார். தம்மோடு இருந்து, தம் போதனைகளை மக்களுக்கு எடுத்துரைக்க பன்னிரு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுக்கிறார். லூக்கா நற்செய்தியில் யோவான் போதிக்கத் தொடங்கியது திபேரியு (Tiberius) சீசரின் 15வது ஆண்டு என்னும் குறிப்பு உள்ளது (காண்க: லூக்கா 3:1). இது கி.பி. 27/28ஆம் ஆண்டு என்று கொள்ளலாம். ஆகும். இயேசு பிறந்தது கி.மு. சுமார் 4ஆம் ஆண்டு என்று கொண்டால், அவர் திருமுழுக்குப் பெற்றபோது சுமார் 32 வயதினராக இருந்திருப்பார். பேதுருவின் பெயர் நற்செய்தி நூல்களில் அடிக்கடி வருகிறது. இயேசு பேதுருவுக்குச் சிறப்பிடம் அளித்ததும் தெரிகிறது. பன்னிரு திருத்தூதரிடையே பேதுரு முதலிடம் பெறுகிறார். இயேசுவின் வாழ்வு நிகழ்ச்சிகளில் செபதேயுவின் மக்களாகிய யாக்கோபு, யோவான் ஆகிய இருவரோடு பேதுருவும் பங்கேற்கிறார். இயேசு மக்களுக்குப் போதனை வழங்குகிறார். குறிப்பாக அவர் போதித்த மலைப்பொழிவு சிறப்பு மிக்கது (மத்தேயு 5:1-7:29; லூக்கா 6:20-49). இயேசு புதுமைகள் பல புரிகிறார். ஐயாயிரம் பேருக்கு அதிசயமான விதத்தில் உணவளிக்கிறார்; இறந்தோருக்கு உயிரளிக்கிறார்; தண்ணீர்மீது நடக்கிறார்.
  • கி.பி. சுமார் 33ஆம் ஆண்டு: இயேசுவே யூத மக்களால் எதிர்பார்க்கப்பட்ட மெசியா என்று பேதுரு அறிக்கையிடுகிறார். இயேசு ஆடம்பரமாக எருசலேம் நகருக்குள் நுழைகிறார். கெத்சமனித் தோட்டத்தில் சொல்லொண்ணா வேதனை அடைகிறார். யூதாசு இஸ்காரியோத்து என்னும் சீடர் இயேசுவை அவர்தம் எதிரிகளுக்குக் காட்டிக்கொடுக்கிறார். அவரைக் கொடுமையாகத் துன்புறுத்துகிறார்கள். யூதேயாவில் பொந்தியு பிலாத்து ஆளுநராக இருந்த காலத்தில் யூதர்களின் தலைமை மன்றம் இயேசு கடவுளைப் பழித்தார் என்று குற்றம் சாட்ட, பிலாத்து இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்கிறார். இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்துறக்கிறார். அப்போது திபேரியு உரோமைப் பேரரசன், ஏரோது அந்திப்பா யூதேயாவின் அரசன், கயிபா தலைமைக்குரு. சிலுவையில் உயிர்துறந்த இயேசுவைக் கல்லறையில் அடக்குகிறார்கள். ஆனால், அவர் மூன்றாம் நாள் இறந்தோரினின்று உயிர்பெற்றெழுந்தார் என்று அவர்தம் சீடர் அறிக்கையிடுகிறார்கள். உயிர்த்தெழுந்த இயேசு அவர்களுக்குத் தோன்றியதாகவும் பறைசாற்றுகிறார்கள். நாற்பது நாள்கள் கழிந்து இயேசு கடைசி முறையாகத் தம் சீடர்களுக்குத் தோன்றி, அவர்கள் உலகின் கடை எல்லைவரை சென்று, தம் செய்தியை அறிவிக்க வேண்டும் என்றும், எல்லாரையும் தம் சீடராக மாற்ற வேண்டும் என்று கூறி அவர்களை விட்டுப் பிரிந்து விண்ணேகுகின்றார். பிரிந்துசெல்லுமுன், "இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என்று வாக்களித்துச் செல்கின்றார் (மத்தேயு 28:20). பத்து நாள்கள் கழிந்தபின், தூய ஆவி இயேசுவின் சீடர்மீது இறங்கிவருகிறார். சுமார் 3000 மக்கள் இயேசுவில் நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுகிறார்கள்.

(தொடர்ச்சி): *திருச்சபையின் தொடக்க காலம்: கி.பி. 34-312

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy