கெஞ்சியின் கதை
கெஞ்சியின் கதை (源氏物語 கெஞ்சி மானோகட்டாரி?) என்பது, பதினோராம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், முராசாக்கி சிக்கிபு என்னும் சப்பானிய உயர்குடிப் பெண்ணொருவரால் எழுதப்பட்டதாகக் கருதப்படும் ஒரு செந்நெறி ஆக்கம் ஆகும். எய்யன் காலப்பகுதியின் உயர் நிலையில் எழுதப்பட்ட இது உலகின் முதலாவது புதினம் எனக் கருதப்படுவதும் உண்டு. உலகின் முதல் தற்காலப் புதினம், உலகின் முதல் உளவியல் புதினம் போன்ற பெருமைகளையும் இதற்கு அளிப்பவர்கள் இருக்கின்றனர். எனினும் இவை இன்னும் சர்ச்சைக்கு உரியனவாகவே உள்ளன.
கெஞ்சி மானோகட்டாரியின் ஒரு பகுதியை முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் சுமாட்சு கெஞ்சோ என்பவர். இதன் பின் ஒரு அத்தியாயம் தவிர்ந்த ஏனைய பகுதிதிகளை ஆர்தர் வாலி என்பவர் மொழிபெயர்த்தார். முதல் முழுமையான ஆங்கில மொழிபெயர்ப்பு எட்வார்ட் சீடென்சுட்டிக்கர் என்பவரால் செய்யப்பட்டது. இவரது மொழிபெயர்ப்பு ஆர்தர் வாலியினதைக் காட்டிலும் நேரடியான மொழிபெயர்ப்பாக இருந்தது. மிக அண்மையில், 2001 ஆம் ஆண்டில் ரோயால் டைலர் என்பவர் செய்த மொழிபெயர்ப்பும் கூடியவரை மூல ஆக்கத்தின் தன்மைகளை நேரடியாக வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. மாருதீ சூருனென் என்பவர் இதனை பின்னிய மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.
அறிமுகம்
[தொகு]இக்கதை, குறிப்பிட்ட காலங்களுக்கு ஒருமுறை உயர்குடிப் பெண்களுக்கு வழங்குவதற்காகப் பகுதி பகுதியாகவே எழுதப்பட்டது. இது தற்காலப் புதினங்களில் காணப்படும் பல கூறுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஒரு மையப் பாத்திரமும், முக்கியமானவையும் முக்கியத்துவம் குறைந்தவையுமாகிய மேலும் பல கதைமாந்தர்களும் இருத்தல்; முக்கிய பாத்திரங்கள் தொடர்பான சிறப்பான பாத்திரப் படைப்பு; மையப் பாத்திரத்தின் வாழ்க்கைக் காலத்தையும் அதற்கு அப்பால் சில காலங்களையும் உள்ளடக்கிய குறித்த காலப் பகுதியில் இடம்பெறும் தொடரான நிகழ்வுகள் என்பன இத்தகைய கூறுகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். இக் கதையில் கதைக்கரு எதுவும் இல்லை. மாறாக ஒரு உண்மை வாழ்க்கையில் நிகழ்பவற்றைத் தொடராக எடுத்துக்கூறும் வகையில் கதை அமைந்துள்ளது. கதைமாந்தரின் வயதும் கதை ஓட்டத்துடன் உயர்ந்துகொண்டு செல்கிறது.
மூலக் கதையில் எந்தக் கதைமாந்தருக்கும் வெளிப்படையான பெயர்கள் வழங்கப்படாதது அதனை வாசிப்பவர்களுக்கும், மொழி பெயர்ப்பவர்களுக்கும் உள்ள தலையாய சிக்கல் ஆகும். மாறாகக் கதைமாந்தர்களின் செயற்பாடு அல்லது வகிக்கும் பங்கு குறித்த பெயர்களே தரப்படுகின்றன. இத்தகைய பெயர்களுள் "இடது அமைச்சர்", "அதியுத்தமர்", "வாரிசு" போன்றவை அடங்குகின்றன. ஆனால், கதை நீண்ட காலத்தினூடாக நகரும் போது இப் பெயர்களால் குறிக்கப்படுபவர்கள் வெவ்வேறானவர்களாக அமைகின்றனர்.