Content-Length: 168291 | pFad | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

சிரிப்பு - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

சிரிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிரிப்பு (Laughter) என்பது மனிதனோடு கூடப்பிறந்த ஓர் உணர்வின் வெளிப்பாடு. இது ஓர் ஆரோக்கியமான மனிதனிடமிருந்து பல விதமான சந்தர்ப்பங்களிலும் இயல்பாக வெளிப்படக்கூடிய ஒன்று. சிரிப்பு மனதையும், உடலையும் வலிமைப்படுத்தி புத்துணர்வுடன் வைத்திருக்கும் என மருத்துவர்கள் கண்டறிந்துள்ளார்கள். [சான்று தேவை] சிரிக்கும் போது உடலில் 300 தசைகள் அசைகின்றன. [சான்று தேவை] உடலிலும், மனதிலும் உள்ள அழுத்தங்களும், கவலைகளும் வெளியேறுகின்றன. குறிப்பாக முகத்திலுள்ள தசைகளும், நெஞ்சுத் தசைகளும் பலம் பெற்று ஆரோக்கியத்தைத் தருகின்றன. சிரிக்கும் போது ஆழமாக மூச்சை இழுக்க முடிவதால் உடல் கூடிய ஒக்சிசனை உள்வாங்கிக் கொள்கிறது. நோயெதிர்ப்புச் சக்தி உடலில் அதிகரிக்கிறது. மூளை அதிகமான சந்தோச ஓர்மோன்களை உடலுக்குள் தெளிக்கிறது. ஆனாலும் வாழ்க்கையின் மீதுள்ள ஆர்வம் காரணமாக ஒரு நாளில் குழந்தைகள் சராசரியாக 400 தடவைகள் சிரிக்கும் போது பெற்றோர்கள் 15 தடவைகள் மட்டுமே சிரிக்கிறார்கள் என்பது கணிக்கப் பெற்றுள்ளது.[சான்று தேவை]

சிரிப்பு என்பது மாந்தர்களிடம் மட்டுமல்லாமல், மிருகங்களிடமும் காணப்படுகிறது.[சான்று தேவை]

பலர் குழுமியுள்ள இடத்தில் ஒருவர் சிரித்தால் அதைப் பார்த்து பலர் சிரிக்க வாய்ப்புண்டாகும். வாய்விட்டுச் சிரித்தால் இரத்த ஓட்டம் சீராகி உடல் நலத்திற்கு நன்மை விளைவிக்கும். பல பெருநகரங்களில் தற்போது பலர் ஒன்றுகூடிச் சிரிப்பதை ஒரு வகையான பயிற்சியாக மேற்கொண்டுள்ளனர்.[சான்று தேவை]

"சிரிப்பு" என்பது பல வித ஒலிகளுடன் மகிழ்ச்சியை தெரிவிப்பதாகும். இது நகைச்சுவையைக் கூறும் போதோ அல்லது கேட்ட போதோ வாய்விட்டுச் சிரித்து மகிழ்ச்சியை வெளிப்படையாகக் காட்டுவதாகும்.

அச்சிதழ்களில் சிரிப்பு

[தொகு]

வார, மாதம் என வெளிவரும் பருவ இதழ்களில் படிப்பவர்களுக்கு மகிழ்ச்சியூட்டுவதற்காகவும், அந்த மகிழ்ச்சியுடன் அவர்களை சிந்திக்க வைக்கவும் சிரிப்புகள் வெளியிடப்படுகின்றன. சில நாளிதழ்களிலும் கூட சிரிப்புகள் வெளியிடப்படுகின்றன. மனிதன் எப்போதும் கடுமையான செய்திகளைப் படிக்கவும் சிந்திக்கவும் விரும்புவதில்லை. சில தகவல்களை நகைச்சுவையோடு பார்க்கவும் படிக்கவும் விரும்புகிறான். சிரிப்புகள் சிரிக்க மட்டுமில்லாமல் சிந்திக்கவும் வைக்கின்ற வகையில் எழுதும் எழுத்தாளர்கள் நகைச்சுவை எழுத்தாளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

சிரிப்பின் வகைகள் சில

[தொகு]
  • அசட்டுச் சிரிப்பு
  • ஆணவச் சிரிப்பு
  • ஏளனச் சிரிப்பு
  • சாகசச் சிரிப்பு
  • நையாண்டிச் சிரிப்பு
  • புன்சிரிப்பு (புன்னகை)

புன்னகை

[தொகு]

புன்னகை என்பது எந்தவிதமான ஓசையையும் செய்யாமல் உள்ளத்தில் ஏற்படும் மகிழ்ச்சியை முகத்தில் காண்பிக்கும் ஓர் உணர்ச்சியின் வெளிப்பாடாகும். உலகம் முழுதும் உள்ள மக்கள், புன்னகை என்பதனை, மனத்தில் உள்ள மகிழ்ச்சியை வெளிப்படத்தும் ஒரு சாதனமாகவே கருதுகிறார்கள். மனதில் உள்ள மகிழ்ச்சியானது புன்னகையின் வடிவில் தானாகவே வெளிவருகிறது. சில சமயம் புன்னகையானது கண்களிலும் கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காணப்படுகிறது. புன்னகை வருவதற்கு முக்கிய காரணம் உள்ளத்தில் ஏற்படும் மகிழ்ச்சியே.

விலங்குகள் பல்லைக்காட்டும் போது அது சிரிப்பதாக நமக்குத் தோன்றுகிறது. ஆனால் அதுவே மற்றவர்களை பயமுறுத்துவதற்காகவும், தாழ்படிந்து போவதற்கான அறிகுறியும் ஆகும். மேலும் அதுவே பயத்தின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

சிரிப்பு பற்றிய மருத்துவக் குறிப்புகள்

[தொகு]
  • தினமும் கொஞ்ச நேரம் குழந்தைகள் மனம் விட்டுச் சிரித்தால் அவர்கள் ஆரோக்கியமாக வளர்வார்கள்.
  • சிரிப்பு மனதை வலிமைப்படுத்தி புத்துணர்வுடன் வைத்திருக்கும்.
  • தினமும் அரை மணி நேரம் மனம் விட்டுச் சிரித்தால் மாரடைப்பை வருவிக்கும் மன அழுத்த வளரூக்கிகளும், அதன் மூலக்கூறுகளும் பெருமளவு குறைந்து உடல் ஆரோக்கியமடையும். (அரைமணி நேரம் சிரிப்பது எப்படி என யோசிப்பவர்களுக்கு, அரைமணி நேரம் சிரிப்பது ஒன்றும் கடினமான காரியம் அல்ல. ஏதேனும் ஒரு நகைச்சுவைப் படத்தை அரைமணி நேரம் பார்த்தாலே போதும் என வழிமுறையும் சொல்லியுள்ளார்கள்).

சிரிப்பின் வரலாறு

[தொகு]

புன்னகை என்பது அச்சத்தின் அறிகுறி என்று பல உயிரியல் அறிஞர்கள் கருதினர்.[சான்று தேவை] பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குரங்குகளும், மனிதக்குரங்குகளும் தாங்கள் யாருக்கும் தீங்கிழைக்காதவர்கள் என்பதனை தங்களின் பல்லைக்காட்டி நம் முன்னோர்களுக்குத் தெரிவித்தன. ஒவ்வொரு உயிரனமும் சிரிப்பை விதவிதமாக வெளிப்படுத்தி வந்துள்ளன. குறிப்பாக, மனிதர்கள் தங்களது மகிழ்ச்சியை புன்னகையாகவும், புன்முறுவலாகவும், முகமலர்ச்சியாகவும், இன்முகம் காட்டியும் தெரிவிக்கிறார்கள்.

சிலர் சிரிக்கும் போது தங்களது மகிழ்ச்சியை புன்னகையாக உதட்டின் மூலமாக தெரியப்படுத்துவர். சிலர் பற்கள் வெளியே தெரியும்படி சிரித்து தெரியப்படுத்துவர். முகத்தில் தெரியும் வெளிப்பாடு, அன்பு, மகிழ்ச்சி, செருக்கு, இறுமாப்பு, தற்பெருமை, அகம்பாவம், அவமதிப்பு, புறக்கணிப்பு, வெறுப்பு முதலிய உணர்ச்சிகளை எல்லோரும் அறியும் வண்ணம் வெளிப்படுத்தும். இதில் அன்பு கலந்த மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தும் ஓர் உணர்ச்சியின் வடிவமே நமக்கு உதட்டில் புன்னகையாக வெளிப்படுகிறது.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

உசாத்துணை

[தொகு]


வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சிரிப்பு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரிப்பு&oldid=3744089" இலிருந்து மீள்விக்கப்பட்டது








ApplySandwichStrip

pFad - (p)hone/(F)rame/(a)nonymizer/(d)eclutterfier!      Saves Data!


--- a PPN by Garber Painting Akron. With Image Size Reduction included!

Fetched URL: https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy